search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் முறைகேடு"

    நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #EdappadiPalaniswami
    சென்னை:

    நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் நடந்துள்ள ரூ.4 ஆயிரத்து 800 கோடி ஊழல் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் உள்பட ஐந்து நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்-அமைச்சர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.


    இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதல்-அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், ‘தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான டெண்டர் பணிகளை ஒதுக்கியதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதல்-அமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோத ஆதாயங்களையும் பெற்றுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami
    ×